Connect with us

கணவனின் காதலி!                           by ரஞ்ஜித் தவராஜா

சிறுகதைகள்

கணவனின் காதலி!                           by ரஞ்ஜித் தவராஜா

Markham/McLevin சந்திப்பில் அமைந்துள்ள Tim Hortons இன் உள்ளே ஒரு மூலை இருக்கையில் இடம் பிடித்து அமர்ந்தபடி, துவாரகா தன் தோழி ஆராதனாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். துவாரகாவின் கண்கள் ஏனோ கொஞ்சம் பனித்திருந்தது. அழுகிறாளா என்ன? ஏதோ இனம் புரியாத கலவரம் ஒன்று அவள் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. துவாரகா யாரையோ பற்றிப் பேசிப் புலம்புகிறாள் என்பதை அங்கிருந்த எவரும் இலகுவில் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவளின் பேச்சுத்தொனி. அவளின் புலம்பல் வேறு யாரைப் பற்றியும் அல்ல. எல்லாம் அவளது கணவன் ஸ்ரீராமைப் பற்றித்தான்.
துவாரகாவின் கணவன் ஸ்ரீராம் மெல்லிய உயர்ந்த சிவந்த பையன். கனடாவின் RBC வங்கியில் நோர்த் யோர்க் கிளை ஒன்றில் பணிபுரிகிறான். நல்ல பதவி, நிறைந்த வருமானம். அன்பின் இலக்கணம் அவனேதான். அவனை எல்லோருக்குமே இலகுவில் பிடித்துப் போகும் அளவுக்கு மிகவும் அன்பாகவும் கலகலப்பாகவும் பேசுவான். இருப்பினும் ஏன் இந்தச் சஞ்சலம் துவராகாவின் மனதிலோ?
துவராகாவிற்கு இருபத்தொன்பது வயதுதான் ஆகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டவள். கணவனை விட மூன்று வயது சிறியவள். அவளின் அழகுக்கும் தோற்றத்துக்கும், அவளது நண்பிகள் அவளை, இன்னொரு “காஜல் அகர்வால்” என்று புகழ்ந்து விடுவது வழமை. பால் போன்ற நிறமும் மெல்லிய, சற்று உயர்ந்த தோற்றமும் உடையவள். சிரிக்கின்ற போது, உதடுகளைவிட அவளது கண்கள் அத்தனை அழகாய் இருக்கும். பெரியோர்கள் பேசி நிச்சயித்த திருமணம்தான். பூர்வஜென்மப் பந்தம் என்பது இதுதானோ என்று எண்ணும்படி கணவன்-மனைவிக்கிடையில் அத்தனை அந்நியோன்யம். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பையன் இருக்கிறான். பெற்றோர் அர்விந்த் என்று அவனுக்கு அழகான பெயர் சூட்டியும் உள்ளனர்.
மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்திருந்த வீட்டில் இப்போதெல்லாம் அனைத்தும் தொலைந்து வெகு நாட்களாகி விட்டது. வழக்கம் போல, கணவன் மீது சந்தேகம் தான் காரணம். வேறென்ன புதிதாக இருக்கப்போகிறது?
மாலை 5:30 மணிக்கு தினமும் நேரம் தப்பாமல் வீட்டுக்கு வந்து சேரும் ஸ்ரீராம், இப்போதெல்லாம் எட்டு மணிக்கும் வீடு வந்து சேருவதில்லை. எப்போதும் ஒரு பதற்றமாகவே முகத்தை வைத்துக்கொள்கிறான். துவாரகா எது கேட்டாலும் எரிந்து எரிந்து விழுகிறான். சரி ஏதோ வேலையில் டென்ஷன் ஆக இருக்குமோ என்றும் துவாரகாவினால் விட்டுவிட முடியவில்லை. காரணம், இப்போதெல்லாம் அவனது செல் போனுக்கு அடிக்கடி ஒரு அழைப்பு வருகிறது. வரும்போதெல்லாம், துவராகாவை விட்டு விலகி, எட்டச் சென்று, அந்த அழைப்பில் பேசிவிட்டு வருகிறான். துவாரகாவுக்கு சந்தேகம் வலுக்கவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் அவன் குளியல் அறைக்குப் போனதும், ஸ்ரீராமின் போனை எடுத்து அதில் அழைப்பு விபரங்களைப் பார்த்தவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முழு அழைப்புகளும் ஒரேயொரு இலக்கத்திலிருந்தே வந்திருக்கின்றன. அது ஒரு பெண்ணின் பெயர். “வதனா கிருஷ்ணமூர்த்தி”.
ஒருகணம் ஆடிப்போய் விட்டாள். ஸ்ரீராமின் மேல் துவாரகா எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தாள் என்பது ஆராதனாவுக்கு மட்டுமே தெரியும்.
இதைப்பற்றிய தன் வேதனைகளைக் கொட்டித் தீர்க்கவே ஆராதனாவை Tim Hortonsக்கு அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். துவாரகா கையில் வைத்திருந்த, அந்தச் சிறிய Triple-Triple கோப்பி கூட அத்தனை கசப்பாக உணர்கிறாள். துவாரகா போல இல்லாமல், ஆராதனா எப்போதுமே கொஞ்சம் நிதானமானவள். எல்லாவற்றையும் பல கோணங்களில் சிந்திக்க வல்லவள். துவாரகாவிடம், “ஸ்ரீராம் எனக்குத் தெரிஞ்ச வரையில் இப்படித் தப்பா போற ஆள் இல்லை. அதால அவசரப்பட்டு எதையும் பண்ணி வெச்சிடாதே” என்று துவாரகாவைத் தன் தோளோடு சாய்த்துக் கொஞ்சம் ஆறுதல் சொல்ல, துவாரகாவின் கண்ணீர்த் துளிகள் தன் கழுத்தை ஈரப் படுத்தியதையும் ஆராதனா கவனிக்கத் தவறவில்லை. “எல்லாமே சரியாயிடும். நீ இப்ப வீட்டை போய் ரெஸ்ட் எடு” என்று சொல்லி துவாரகாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தானும் கிளம்பிச் செல்கிறாள் ஆராதனா.
இப்படியே ஒரு வாரம் ஓடிவிடுகின்றது. ஒரு நாள் சனிக்கிழமை மதியமளவில், பிக் பொஸ் நிகழ்ச்சியை ரசித்தபடி ஸ்ரீராம் டீவிக்கு முன்னால், பேமிலி ரூமில் உட்கார்ந்திருக்கிறான். குழந்தை அர்விந்த் தூங்கிக்கொண்டிருக்கிறான். துவாரகாவும் வந்து அங்கே ஒரு சோபாவில் அமர்ந்து கொள்கிறாள். முன்னரெல்லாம், இப்படியொரு சந்தர்ப்பம் அமைந்தால், ஸ்ரீராமின் மடியில் துவாரகா தலையை வைத்துப் படுத்துக்கொள்ள, அவளது வயிற்றுக்குக் குறுக்கே பூப்போன்ற அவளது மெல்லிடையில் தன் ஒரு கையை வைத்தபடி, மறு கையினால், அவளது நெற்றியில் படரும் முடிகளை வாரியபடி, ஸ்ரீராம் டீவி நிகழ்ச்சிகளை ரசிக்க, துவாரகா தன் கையில் ஐ-போனை வைத்துக்கொண்டு அதில் பேஸ்புக் கினை அலசிக்கொண்டிருப்பாள். அவனின் மடியில் படுத்திருந்தவாறே அப்பப்போ தன்னையும் கணவனையும் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றிக்கொண்டும் இருப்பாள். ஆங்காங்கே கெஞ்சல்கள், கொஞ்சல்கள், சிணுங்கல்கள் வேறு. அப்படி சில ரொமான்டிக்கான பொழுதுகள் எல்லாமே இன்று எட்டாக் கனியாகிப் போயிற்று.
இதையெல்லாம் எண்ணிப் பெருமூச்சு விட்டவாறே நின்றிருந்த துவாரகாவைத் திரும்பிப் பார்த்த ஸ்ரீராம், “இப்பிடி வந்து இரு…” என்று தன் கைகளால் தன்னருகே அழைக்க, “இதென்னடா திடீரெண்டு பாசம் பொங்குதோ” என்று எண்ணியபடி துவாரகாவும் எதுவும் பேசாமல், ஆனால் தன் முகத்தைக் கொஞ்சம் “உர்ர்ர்” என வைத்துக்கொண்டே அவன் அருகில் சென்று அமர, அதே நேரம் ஸ்ரீராமின் செல் போன் மணி அடிக்கிறது. அதை எடுத்து “ஹலோ” என்றவனின் முகம் சட்டென மாறிவிடுவதை துவாரகா கவனிக்கத் தவறவில்லை. “இந்தா….. இப்ப வாறேன் வதனா” என்றவன் போனை வைத்துவிட்டு சட்டென எழுந்து உடை மாற்றச் செல்கிறான்.
துவராகா அப்படியே ஒருகணம் விறைத்துப்போய் நிற்கிறாள்.
“அவளோட ஒழிச்சு ஒழிச்சுப் பேசினவர்… இப்ப எனக்கு முன்னாலேயே நிண்டு பேசுற அளவுக்கு துணிஞ்சிட்டார்” என்கிற கோபம் அவளது கண்களில் தீப்பிழம்பாய் தெறித்தது. அவசர அவசரமாய் ஷேர்ட் டை “இன்” செய்த படியே வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியேறியவன் தன்னுடைய பென்ஸ் ES450 காரை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான்.
“அவசரமாய் அப்படி எங்கே கிளம்புகிறான்? வந்ததோ வதனாவின் போன் தானே. அப்படியென்றால் அவளிடம்தான் போகிறான்.”
இன்று இவனை விடுவதில்லை. இருவரையும் கையும் களவுமாய்ப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய குழந்தையை பார்த்துக்கொள்ளும்படி தன் மாமனாரிடம் சொல்லிவிட்டு, தன்னுடைய ஹொண்டா சிவிக்கில் பறக்கிறாள். ஸ்ரீராமின் காரைக் கவனமாகப் பின் தொடர்ந்தபடி அவன் பின்னாலேயே துவாரகா சென்றுகொண்டிருக்கிறாள். அப்படியே கார்கள் இரண்டும் ஒன்றையொன்று பின்தொடர்ந்தவாறு ஹைவே 407 இலிருந்து 9th Lineஇல் வெளியேறிச் சென்றது. தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஸ்ரீராமின் கார், மார்க்கம் ஸ்டோவில் ஹொஸ்பிடலை நெருங்கிவிட, “ஆசை நாயகிக்கு வருத்தம் வந்திட்டுதோ” என்று தனக்குள் முணுமுணுத்தபடி வைத்தியசாலை யின் கார் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு, அவனையே பின்தொடர்கிறாள். Wound யூனிட்டின் ஊடாக நுழைந்து சென்ற துவாரகா, அங்கே ஒரு வார்ட் அறையின் கதவைத் திறந்து, ஸ்ரீராம் உள்நுழைவதைக் கண்டு விடுகிறாள். கதவிற்கு வெளியே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, சட்டென கதவைத் திறந்தவள், அங்கே கட்டிலைப் பார்த்தபடி ஸ்ரீராம் நிற்பதையும், யாரோ கட்டிலில் படுத்திருப்பதையும் கண்டு, கட்டிலை நெருங்குகிறாள். அதுதான் வதனாவா? அருகில் சென்று, அது யார் எனப் பார்த்தவளுக்கு உலகமே இருண்டு போனது.
அண்ணா…………………என்று அலறியே விடுகிறாள்.
அங்கே படுத்திருந்தது, துவாரகாவின் கூடப்பிறந்த ஒரேயொரு அண்ணன் ஆனந்த் அது. அப்படியே ஒருகணம் துடிதுடித்துப் போனவள்,
ஆனந்தின் உடல் முழுவதும் பாண்டேஜ் போட்டபடி அவன் இருந்த கோலம் கண்டு விம்மி விசும்பி அடங்கவே அரை மணிநேரம் ஆனது. அருகிலேயே அவளது தோளினைப் பற்றியபடி ஸ்ரீராம் “இட்ஸ் ஓகே. அண்ணனுக்கு ஒன்றும் இல்லை” என்று சொல்லித் தேற்றிக்கொண்டிருக்கையில் அந்த சமயம் பார்த்து, ஒரு இளம்பெண் துவாரகாவின் அருகில் வந்து நான்தான் உன்னோட அண்ணி. ஆனந்த்தின் மனைவி. என்னுடைய பெயர் வதனா என்கிறாள். “நானும் ஆனந்த்தும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால், உங்கள் எல்லோராலும் விரட்டப்பட்டோம். போனமாசம் ஹைவே 401 ல ஆனந்த் ஆக்சிடென்ட் ஆனபோது, எனக்கு என்ன செய்யுறதெண்டே தெரியேல்லை. ஸ்ரீராம் அண்ணனுக்குத்தான் அடிச்சேன். எங்களுக்கெண்டு யாருமே இல்லை. என்னோட பேர் கூட உனக்குத் தெரிஞ்சிருக்காது என்ன?” என்று கண்களில் நீர் பெருக, துவாரகாவின் தோள்களைப் பற்றிக்கொண்டு விம்முகிறாள். “உன் புருஷன் சரியான நல்லவர் துவாரகா. ஆனந்த் ஆக்சிடென்ட் ஆன நாளில இருந்து அவர்தான் எங்களைக் கவனிச்சுக்கொள்ளுறார்” என்று வதனா சொல்லக் சொல்ல துவாரகா மனம் அப்படியே ஒருகணம் செத்துப் போய் விடுகிறது. ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டவள் திகைத்து நின்றது போல ஒன்றுமே பேசாது நிற்கிறாள். தன் கணவனையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்ற துவாரகாவின் கண்கள் அவனிடம் மௌனமாய் மன்றாட்டமாய் மன்னிப்புக் கேட்கின்றது போலும். உடனே ஸ்ரீராம் அவளிடம், “இதப் பார் துவாரகா! ஏதோ காதலிச்சுக் கல்யாணம் பண்ணிச்சினம் எண்டதுக்காக நீயும், மாமா மாமியும் இத்தனை நாளா ஆனந்த்தையும் வதனாவையும் ஒதுக்கி வெச்சது போதும். நாங்கள் ரெண்டு பேரும் கல்யாணமான நாள்ல இருந்தே உனக்குத் தெரியாம ஆனந்த்தோட நான் தொடர்பு வெச்சிட்டுத்தான் இருக்கிறேன். என்ர பென்ஸ் கார் கூட, உன் அண்ணன் எங்கட கல்யாணப்பரிசா தந்ததுதான். அது என்ர உழைப்பில வாங்கின காரே இல்லை. எங்கட பையன் பேர், அர்விந்த் கூட நாங்கள் தெரிவு செய்து வெச்சிட்டதா நீ நம்புறாய். ஆனால், அது உன் அண்ணன் தெரிஞ்செடுத்த பேர் எண்டது உங்கள் யாருக்குமே தெரியாது. இனியாவது இதுகளை மன்னிச்சிடு. உன் அம்மா, அப்பாவை நான் சமாளிச்சிடுறேன்” என்று மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறான்.
“உன் அண்ணாவை நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி, வீட்டுக்கு கொண்டு போகலாம் எண்டு சொல்லிட்டினமாம். அவரின்ர காயம் ஆறுற வரைக்கும் அவரை எங்களோட வீட்டில வெச்சிருப்பமா?” என்று ஸ்ரீராம் சொல்ல, அவனின் மார்பில் சாய்ந்துகொண்டவள் அழுது முடியும் போது, ஒருமணி நேரம் போய் விட்டிருந்தது. “ச்சே! இவனைப் போய் தப்பா நினைச்சிட்டமே… அதுவும் வதனா ன்னுறது அண்ணி எண்டு கூடத் தெரியாம” என்று அவளது மனச்சாட்சி அவளைக் குத்திக் குடைந்து கொண்டே இருந்தது.
அன்றிரவு வீட்டில் டீவியில் TVI HD சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேணுதனின் “திருமணபந்தம்” நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. அதில் இந்திரன்-இந்துஜா என்ற ஜோடி தங்களுடைய காதல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தனர். வேணுதனின் குசும்புக் கேள்விகளுக்கு, கூச்சத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்த அந்த ஜோடிகளைப் பார்த்து, சிறு புன்னகையை உதிர்த்தபடி ஸ்ரீராம் ரசித்துக்கொண்டிருந்தான். பல நாட்களுக்குப் பிறகு, சோபாவில் ஸ்ரீராமின் மடியில் சாய்ந்து அவனை இறுகக் கட்டியணைத்தபடி அவனது ஸ்பரிசத்தில் துவாரகா திளைத்திருக்க, அந்தநேரம் பார்த்து துவாரகாவின் செல் போன் மணி அடிக்க, சினந்து கொண்டே அவளும், அழைப்பது யாரெனப் பார்க்கிறாள்.
அது ஆராதனா.
ஸ்ரீராமைக் கட்டி அணைத்த படி, தன் ஒற்றைக் கையால், அந்த அழைப்பை எடுக்காமல், பட்டன் ஒன்றை அழுத்தி விடுகிறாள். ஆராதனாவுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் கண்டிப்பாய் போயிருக்கும்…….
“I am busy right now. Call me later”

More in சிறுகதைகள்

  • சிறுகதைகள்

    காதலெனும் கவிதை சொல்லடி… 

    By

    கொழும்பு மஜெஸ்டிக் சிட்டி ஷாப்பிங் மோல் அது. அங்கிருந்த எஸ்கலேட்டர் மூலமாக படிகளில் சென்று கொண்டிருந்த வரதனின் கண்கள் மேலே நின்றுகொண்டிருந்த...

To Top