Connect with us

காதலெனும் கவிதை சொல்லடி… 

சிறுகதைகள்

காதலெனும் கவிதை சொல்லடி… 

கொழும்பு மஜெஸ்டிக் சிட்டி ஷாப்பிங் மோல் அது. அங்கிருந்த எஸ்கலேட்டர் மூலமாக படிகளில் சென்று கொண்டிருந்த வரதனின் கண்கள் மேலே நின்றுகொண்டிருந்த அந்தப்பெண்ணையே உற்று நோக்கின. அது சங்கீதாவே தான். சந்தேகமே இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் காணும்போதும் வரதன் கண்களில் அத்தனை பிரகாசம். இவள் மாறியிருப்பாளா? காலத்தின் இடைவெளிகள் இவளை மாற்றி இருக்குமா? என்ற எண்ண ஓட்டங்களின் இடையே, அவளின் நெற்றியிலிருந்து குங்கமம் அவன் கண்களில் படுகிறது. கண்கள் சற்று கீழ் நோக்குகின்றன. அங்கே அழகிய தாலி ஒன்று அவளது மார்புகளுக்கிடையே ஒழிந்து புதைந்து கிடக்கிறது. திருமணமாகி விட்டது அவளுக்கு. அவனது நினைவுகள் மெல்ல மெல்ல இருபத்தி மூன்று ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றன. கிடைத்தற்கரியதொரு வசந்த நாட்கள். முதன் முதலாய் A/L வகுப்புக்கு நுழைந்த காலம். CCA (College of Commerce and Arts)என்ற தனியார் கல்லூரியில் உதயன் ஆசிரியரின் பொருளியல் வகுப்பு விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது. உதயன் சேர் தனது வகுப்பை நடத்திக்கொண்டிருக்கும் போது, சுடச்சுடக் கடைந்தெடுத்த சிற்பம் போல ஒரு தேவதை அத்தனை மாணவர்களுக்கு நடுவே மெதுவாய் நடந்து வந்துகொண்டிருந்தாள். புது அட்மிஷன். அவள் பெயர் சங்கீதாவாம். சிலரின் முணுமுணுப்பு. காதில் விழுந்தது.
மூன்று மாதங்களுக்கு மேல் கடந்து விட்டது. சங்கீதாவின் வசீகரமான கண்களும் குழி விழுந்த சிரிப்பும் எல்லோரையுமே அவள் வசப்படுத்தி விடும். மற்றவர்களைப் படைக்க பிரம்மனுக்கு அரைமணி நேரம் எடுத்ததென்றால், அவளை படைக்க அரை நூற்றாண்டு காலம் எடுத்திருக்குமோ என்னவோ. அத்தனை அழகு. தொட்டுப்பார்த்தால் பஞ்சு தோற்றுப்போய்விடும். அவ்வளவு மென்மை. பிரம்மன் ரம்பையையும் ஊர்வசியையும் கலந்து ஒரு உருவம் கொடுத்திருக்கிறான். அவள் கண்களின் பிரகாசத்துக்கு சூரியனே தன் கண்களைப் பொத்திக்கொள்ளுமாம். அவளின் இடையை பார்த்தால், இளவேனில் காற்றில் ஆடும் எங்கள் ஊர் “அசோகா” மரம் போல வளைந்து நெளியும். அவளின் அழகிய மார்பகங்கள் பற்றி சொல்வதென்றால் அப்பப்பா… கதையை விடுங்கள். மூக்கினைப் பார்த்தீர்கள் என்றால் நம்மூர் ஜம்பு நாவல் பழம் தான் நினைவு வரும். அத்தனை கூர்மையும் செம்மையும். அவளது நீண்ட கழுத்து இருக்கே… அப்படியே யாழ் கோட்டையடி மணிக்கூட்டு கோபுரம் போல நேர்த்தியாய் நிமிர்ந்து இருக்கும். கொஞ்சம் கட்டையாக அவள் அணிந்துள்ள பாவாடையின் கீழே சாடையாய் தெரிகின்ற முழங்கால் சில்லுகள் கூட அவளுக்குத் தனி அழகு தான். அவளின் பல்வரிசையைப் பார்த்தால் அப்படியே நிலத்தில் சிந்தியுள்ள பால் துளிகள் போல முத்து முத்தாக இருக்கும். அவளின் ஒற்றைப் பின்னல் ஜடையிலிருந்து தப்பித்து தொங்கிக்கொண்டிருக்கும் அந்த ஒரு சில முடிகளுக்குக் கூட ஒரு கவிதை எழுதி விடலாம். அந்த அழகிய வெண்ணிறக் கால்களால் அவள் நடந்து போகும்போது, அம்மன் கோயில் தேர் கூட இவ்வளவு பொலிவாக இருக்குமோ தெரியாது. இளம் நெற்கதிர்கள் போல அத்தனை அழகான மெல்லிய கைவிரல்கள். கையில் கறுப்பு நிறத் தோல்பட்டியினால் ஆன ஒரு கைக்கடிகாரம். அழகிய ஆடைகள் அவளுக்கு அழகு கொடுக்கவில்லை. அவள் அணிந்திருப்பதால் ஆடைகள் அழகு கொள்கின்றன. அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம், அப்படியே மனதுக்குள் இளையராஜாவின் “தானா வந்த சந்தனமே” என்ற பாடல் முழுதாக ஒருதடவை ஓடி முடிந்து விடும்.
வரதன் படிப்பில் வலு கெட்டிக்காரன். லட்சணமான தோற்றம். சங்கீதா படிப்பில் அவன் அளவுக்கு இல்லை. சங்கீதாவோ யாழ்ப்பாணத்தின் பிரபல நகை வியாபாரியின் ஒரே மகள். செலவச் செழிப்பு அவள் அணிந்துள்ள நகைகளைப் பார்க்கும் போதே தெரிந்துவிடும். ஆனால், வரதனோ சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். இவனது தாய் ஜெயலக்ஷ்மி வீடு வீடாக சென்று வயோதிபர்களுக்குப் பணிவிடை செய்யும் பணிப்பெண். நிலைவரம் இப்படி இருக்கையில் சங்கீதா மீது காதல் கொள்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை சிந்திக்க அவனது வயது மறைத்து விட்டது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலிருந்தது இவனது கனவு. ஒரு நாள் கே.கே.எஸ் வீதியின் தட்டாதெருச் சந்தியில் வைத்து, அவளிடம் ஏதோ பேச வேண்டி இருப்பதாய்க் கூறி சங்கீதாவை வழிமறித்த வரதன், அவளிடம் தன் காதலை தயக்கமே இல்லாமல் சொல்லிவிடுகிறான். இதை சற்றும் எதிர்பாராத சங்கீதாவுக்கு கோபம் மூக்கு நுனியில் எகிறியது. இதில் தனக்குச் சம்மதம் இல்லை என்று ஒரு சொல்லில் கூறிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால், இவளோ தன்னையும் வரதனையும் பொருளாதார ரீதியில் ஒப்பிட்டு நிறையவே பேசி விட்டாள். வரதனின் ஏழ்மையை அதிகம் விமர்சித்து விட்டாள். பேச்சுக்களில் அனல் கக்கியது. காதலை மறுத்திருந்தால் கூட வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கும் வரதனுக்கு. ஆனால், அவன் கண்கள் கலங்கும் அளவுக்கு அசிங்கப்படுத்தி விட்டாள். பணக்காரனாக இருந்திருந்தால், இவனது காதல் இன்று இலகுவாகக் கைகூடி இருக்கும். ஏழைப் பெற்றோருக்கு மகனாய்ப் பிறந்த வரதனின் விதி. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஈட்டி போல வரதனை பலமுறை பதம் பார்த்து விட்டது. மிகுந்த அவமானமும் வேதனையும் அடைந்த வரதன் அவளை விட்டு முழுமையாகவே விலகி விட்டான். ஆனால், துளியளவும் அவள் மீது வெறுப்பைக் காட்டவில்லை. கண்ணியமாய் விலகிவிட்டான். 
இந்த பிளாஷ்பேக் ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் போல வரதனின் மனத்திரையில் ஓடி முடிந்தது. இத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் சங்கீதாவின் அழகும் தோற்றமும் மாறவே இல்லை. அவள் கண்களில் படாமலேயே தப்பிவிட நினைத்த வரதனை சங்கீதா கவனிக்கிறாள். புருவங்களைச் சுருக்கி வரதனையே நோக்கியவள், 

“ஏய் வரதன்……….. நீ வரதன் தானே? நான் தான் சங்கீதா. A/L இல் உன்கூடப் படித்தேனே? மறந்து விட்டாயா?” என்று கேட்ட சங்கீதாவை வியப்புடன் நோக்குகிறான் வரதன். இவளிடம் எவ்வளவு பேச ஆசைப்பட்டிருப்பான். இன்று இவளே பேசுகிறாள். அத்தனையையும் மௌனமாய் கேட்டுக்கொண்டு மட்டும் இருக்கிறான் வரதன். வழக்கம் போலவே சங்கீதா தன் பணக்காரப் பெருமைகளை அள்ளி வீசுகிறாள். உனக்குத் தெரியுமா வரதன்… நான் சதீஷ்குமார் என்று ஒருவரைத் திருமணம் செய்திருக்கிறேன். அவர் பரம்பரைப் பணக்காரர். அவர் ஒரு சிவில் என்ஜினியர். கொழும்பில் கட்டப்பட இருக்கும் மிகப்பெரிய உல்லாச விடுதியொன்றின் சீவ் என்ஜினீயர் (Chief Engineer) இவர் தான். என்று தன் கணவனைப் பற்றி விளாசித் தள்ளுகிறாள். “ஓகே சங்கீதா. நான் கொஞ்சம் அவசராமாய்க் கிளம்பு வேணும்” என்று பவ்வியமாய்ப் பேசி அவ்விடத்தைவிட்டு நகர எத்தனித்த வரதனை, “என் புருஷனை பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டுப் போயேன் வரதா. இப்ப வந்திருவார்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே “சேர்…. நீங்களா?” என்று கேட்டபடி ஒருவன் வரதனின் தோளில் கை வைக்கிறான். “என் மனைவியும் இங்க தான் இருக்கிறா. உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் சேர்” என்று சொல்லிவிட்டு அருகில் நின்று கொண்டிருந்த சங்கீதாவிடம் “சங்கீதா! இவர் பெயர் வரதன். ப்ளூ மௌன்டன் கொன்ஸ்ராக்க்ஷன்ஸ் எம்.டி இவர்தான். இவர் தான் என்னைத் தெரிவு செய்து இந்தப் ப்ரொஜெக்டுக்கு சீவ் எஞ்சினியர் ஆ நியமிச்சிருக்கிறார். மிச்சம் நல்லவர். என்னுடைய இந்தக் கனவு வாழ்க்கையைப் பிச்சையாப் போட்டவர் இவர்தான். இவரிட்டை வேலை செய்ய நான் குடுத்து வச்சிருக்கோணும் என்று சொல்லச் சொல்ல சங்கீதாவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத நெருடலும் பதற்றமும் சூழ்ந்து கொண்டன. “சின்ன வயசில யாரோ ஒருத்தி காசு பணம் இல்லாதவரென இவரின் காதலை மறுத்து விட்டாளாம்” என்று சங்கீதாவின் தோள்களில் கையை வைத்தபடி சதீஷ்குமார் சொல்ல, எதிரே நின்ற வரதன் அந்த சூழ்நிலையை சற்று சங்கடமாக உணர்கிறான். சங்கீதா மட்டும் எதுவும் பேசாமல், மௌனமாக இருக்கிறாள். இருபத்து மூன்று ஆண்டு கால நினைவுகள் அவள் மனதிலும் ரீபிளே ஆகிக் கொண்டிருப்பது மட்டும் புரிந்தது.

More in சிறுகதைகள்

To Top